ஐங்குறுநூறு
நெய்தல்திணை
191.
கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்
கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்
கானல் ஞாழற் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள்என்
நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே.
192.
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்
பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தொழிஎன் வளையே.
193.
வலம்புரியுழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துரைகெழு கொண்கநீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே.
194.
கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை
ஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க
நன்னுதல் இன்றுமால் செய்தெனக்
கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.
195.
வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலரும் துயரம் நல்கிப்
படலின் பாயல் நல்கி யோளெ.
196.
கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தென்கழி சேயிறாப் படூஉம்
தன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.
197.
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
198.
வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை
இளையர் ஆடும் தளைஅவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே.
199.
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே
200.
இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே
விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுக நாமே.